கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரில் அருவருப்பான சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 15 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாளக்காடு மாவட்டம் கல்லடிகோடையைச் சேர்ந்த சத்யபாமா (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வன்கொடுமையை வீடியோவாக பதிவு செய்தது, அவருடைய கணவர் சபிக் என்பவரே என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திரூரைச் சேர்ந்த பி.பி.அங்காடி பகுதியைச் சேர்ந்த சபிக், தனது மனைவியின் செயல்களை மொபைல் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் குடும்பத்தினர் திரூர்போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் சத்யபாமாவை கைது செய்துள்ளனர். இந்தக் குடும்பம் போதை மருந்து பழக்கத்தில் இருந்ததாகவும், அந்த சிறுவனுக்கு போதை மருந்து கொடுத்து வன்கொடுமை செய்து, பிறகு அந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிறுவனை மிரட்டி, பெண்களின் நிர்வாண வீடியோக்களை எடுக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. தற்போது சபிக் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் திரூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை மையமாகக் கொண்டு இப்படியொரு துஷ்பிரயோகம் நடந்துள்ளது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.