நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜேடர்பாளையம் அருகே ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி திடீரென  வீட்டில் இருந்து மாயமானதால் பெற்றோர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பாக காணாமல் போன நிலையில் வீட்டிலிருந்து தன்னுடைய தாயாரின் செல்போனையும் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தி காணாமல் போன சிறுமியை தேடினர். பின்னர் அந்த செல்போன் சிக்னல் மூலம் சிறுமி இருக்கும் இடம் தெரிந்ததால் அங்கு சென்று காவல்துறையினர் ‌ சிறுமியை மீட்டனர்.

அந்த சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் சில வாலிபர்கள் தன்னை திருவண்ணாமலைக்கு வர சொன்னதாக கூறியுள்ளார். பின்னர் அங்கு வைத்து தன்னை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அதன்படி விக்னேஷ், செல்வகுமாரன், ஆகாஷ், இளங்கோவன் மற்றும் சஞ்சய் ஆகிய 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில் மாயமான ஒரு வாலிபரை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.