
மைசூரு சாமுண்டி மலை கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சசிகலா மற்றும் சந்தனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரையும் சவுகார் உண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான தர்மராஜ் மற்றும் வினோத் ராஜ் என்பவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்தின் போது இரண்டு மகள்களுக்கும் தலா 30 கிராம் நகை, மாப்பிள்ளைகளுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக தருவதாக கூறியுள்ளார். திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு மகள்களுக்கும் தலா 10 கிராம் நகை மட்டும் அவர் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள நகை மற்றும் மோட்டார் சைக்கிளை வாங்கி வரும்படி மாப்பிள்ளை வீட்டார் இரண்டு மகள்களையும் கொடுமைப்படுத்தி உள்ளனர். அது மட்டுமல்லாமல் அவர்களை கடுமையாக தாக்கிய நிலையில் சந்தனா கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவர் மீது குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதால் வயிற்றில் இருந்த கரு கலைந்தது. இதனைத் தொடர்ந்து சகோதரிகள் இருவரும் தங்கள் வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறி கதறி அழுதுள்ளனர். இதனைத் தொடர்ந்து மோகன்ராஜ், மருமகன்கள் தர்மராஜ் மற்றும் வினோத் ராஜ் அவர்களின் பெற்றோர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.