பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது ஹீரமண்டி தி டைமண்ட் பஜார் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி விவரிக்கிறது. இந்தத் தொடரில் நடிகைகள் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ், ரிச்சா தத்தா உட்பட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகை மனிஷா கொய்ராலா ஹீரமண்டி வெப் தொடரில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஹீரமண்டி தொடரில் ஒரு காட்சியில் நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. அந்த ஒரு காட்சிக்காக நான் 12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன். அந்த தண்ணீர் வெதுவெதுப்பாகவும் சுத்தமாகவும் இருப்பதை இயக்குனர் உறுதி செய்தாலும் சிறிது நேரத்தில் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இந்த காட்சியை எடுத்த பிறகு நான் மிகவும் சோர்வடைந்ததோடு எனக்கு மிகவும் மன அழுத்தத்தையும் கொடுத்தது. இருப்பினும் இதயபூர்வமாக அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் நடிகை மனிஷா கொய்ராலா கேன்சரால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து போராடி மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.