
சென்னை தியாகராய நகர் பகுதியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், தியாகராய நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் இன்று காலை அபிபுல்லா சாலை வழியாக அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், அவர் முன் வந்து முகத்தை கிள்ளி, “ஐ லவ்யூ செல்லம்” என கூறி தொந்தரவு செய்துள்ளார்.
இந்தத் திடீர் செயலால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டதும், அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலுக்கான்று வந்த தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்தில் இருந்து அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதில் ஈடுபட்ட நபர் தியாகராய நகர் தர்மாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (34) என்பதும், சம்பவ நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணை முடிவில், குற்றம் செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம், பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பி உள்ளது.