இந்திய விமான படையின் ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் குழுவைச் சேர்ந்த பாரா ஜம்ப் பயிற்சியாளராக ராம்குமார் திவாரி என்பவர் வேலை பார்த்து வந்தார். ராம்குமார் 1000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்தார். அப்போது அவரது பாராசூட் செயலிழந்தது. இதனால் கீழே விழுந்து ராம்குமார் படுகாயமடைந்தார்.

உடனே அவரை ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த இந்திய விமானப்படை ராம்குமாரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதேபோல, கடந்த பிப்ரவரியிலும் மல்புரா டிராப்பிங் பகுதியில், ஜூனியர் அதிகாரி மஞ்சு நாத் பாராஜம்பிங் பயிற்சியில் உயிரிழந்ததை அடுத்து இது இரண்டாவது சம்பவமாகும். 2002ஆம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்த ராம்குமார் திவாரி, தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் விமானப்படை குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இந்த துயரமான சம்பவம், விமானப்படை மற்றும் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.