கேரளா மாநிலம் அரீக்கோடு அருகிலுள்ள திரட்டம்மலில், கால்பந்து போட்டி நடைபெறும் போது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம், போட்டி தொடங்குவதற்கு முன்பே நடந்ததாக கூறப்படுகிறது. அதிக அளவில் வெடித்த பட்டாசுகள், அருகில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் மீது பட்டதில் 58 பேர் காயமடைந்தனர். இவர்களை மீட்டு   அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம், யுனைட்டெட் எஃப்.சி. நெல்லிக்குட் மற்றும் கே.எம்.ஜி. மாவூர் அணிகள் மோதிய இறுதி போட்டி நடைபெறும் நேரத்தில் நிகழ்ந்தது. போட்டியின் ஒரு பகுதியாக, பட்டாசுகளை வெடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவை தாறுமாறாக வெடித்து பார்வையாளர்கள் மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அதோடு  பட்டாசுகள் வெடிக்க அனுமதி இருந்ததா, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.