குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீதர்ஷன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கும் 21 வயதான கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியது. இவரும் அந்த மாணவியும் பல இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீதர்ஷன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.  இதைத்தொடர்ந்து அவர் சொல்லும் இடத்திற்கு வரவில்லை என்றால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் அந்தப் மாணவியின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுபோன்று தேனியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரும் அந்த வாலிபர்  மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நானும், ஸ்ரீதர்ஷனும் காதலித்து வந்தோம். ஆனால் அவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் நான் அவரிடமிருந்து விலகினேன். இதனால் அவர் நங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் சொல்வதை கேட்கவில்லை என்றால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக தொடர்ந்து மிரட்டினார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார்களின் பெயரில் காவல்துறையினர் ஸ்ரீதர்ஷன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அந்த மாணவிகளின் செல்போனை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.