
சென்னை மணலி புதுநகர் அருகே வெள்ளி வாயல் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கண்டெய்னர்கள் நிறுத்தும் இடம் இருக்கிறது. இங்கு சாய் பிரசாத் (54) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். அதன் பிறகு இங்கு முகிலன் (27), சாய் பாரதி (27), சாம்(20), பாலாஜி (25) ஆகிய வாலிபர்களும் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் பாலாஜி கடந்த 5-ம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மாற்றுப் பணியாளர்கள் வருவதற்கு முன்பாகவே வேலையில் இருந்து சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக அவரிடம் மேலாளர் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த பாலாஜி தன்னுடைய நண்பர்கள் முகிலன், சாம் மற்றும் சாய் சாரதி ஆகியோருடன் நேற்று முன்தினம் மேலாளர் தூங்கும் அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளனர். தூங்கிக் கொண்டிருந்தவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.