திமுக கட்சியின் முன்னாள் வடசென்னை தொகுதி எம்பி குப்புசாமி கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். இவரிடம் குமார் (72) என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னர் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு சென்றார். ஆனால் அதன் பின் அவர் காணாமல் போய்விட்டார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குமாருக்கும் ரவி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக ரவியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அவர் குமாரை கடத்தி கொலை செய்து செஞ்சி அருகே உடலை புதைத்து விட்டதாக கூறினார். இந்த விசாரணையில் அவருடைய கூட்டாளிகளான விஜய் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதாவது செங்கல்பட்டு மாவட்டம் முத்தண்டி பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் குமாருக்கு சொந்தமாக இருக்கும் நிலையில் இந்த நிலத்தை அவர் தன்னுடைய உறவுக்கார பெண்ணான மகாலட்சுமி என்பவர் பெயரில் வைத்திருந்த நிலையில் அதற்கான ஒரிஜினல் பத்திரத்தையும் வைத்திருந்தார்.

இந்த நிலத்திற்கு ரவி தன்னுடைய கள்ளக்காதலி பெயரின் போலியான பத்திரம் வைத்திருந்த நிலையில் தற்போது அந்த நிலத்தின் மதிப்பு கோடி கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ரவி ஒரிஜினல் பத்திரத்தை குமாரிடமிருந்து வாங்குவதற்காக அவரை காரில் கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.