
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் திமுக கூட்டணி அடுத்து வரும் தேர்தலிலும் மாற்றமின்றி களம் காண்கிறது. மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த கூட்டணியில் பாமக, அமமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகியவைகள் உள்ளது. அதன்பிறகு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை விஜய் தொடங்கியுள்ள நிலையில் தேமுதிக விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க பிரேமலதா விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் ஒன்று திரள வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்த நிலையில் அவரை அதிமுக முன்னாள் எம்எல்ஏ செங்கோட்டையன் நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
முன்னதாக டெல்லியிலும் செங்கோட்டையன் நிதியமைச்சரை நேரில் சந்தித்து பேசிய நிலையில் நேற்றும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதே போன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிதி அமைச்சரை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட பாஜக முடிவு செய்துள்ளதால் தற்போது அனைவரையும் சந்தித்து பேசுவதாக ஒரு தகவல் பரவி தமிழக அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.