
மதுரை மாவட்டம் கப்பலூரில் சுங்கச்சாவடி உள்ளது. அந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த சுங்கச்சாவடியை அகற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, வாகன கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளூர் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் சுங்கச்சாவடிக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் சேர்ந்து சுங்கச்சாவடியை அகற்ற இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கன்னியாகுமரி முக்கிய நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது ஆர்.பி.உதயகுமார் நாங்கள் மூன்று ஆண்டுகளாக போராட்டம் நடத்தியுள்ள நிலையில் முதலமைச்சர் இதைப்பற்றி பேச மறுக்கிறார். நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது.
தற்போது உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர் எனக் கூறினார். மேலும் உள்ளூர் வாகனங்கள் 50% கட்டணத்துடன் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே சுங்கச்சாவடியை முழுமையாக அகற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கூறியுள்ளனர். மேலும் இதனால் பல இடங்களில் கடை அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் இந்த போராட்டம் சுங்கச்சாவடியை அகற்றும் வரை தொடரும் என்று கூறினர்.