நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். அவர் பேசுவது சமுதாயத்தில் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டுவது போல் இருப்பதாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இதிலிருந்து நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது சீமான் அரசியல் கட்சி தலைவர்களை மரியாதையுடன் பேச வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் அடுத்தவரை எரிச்சலுட்டும் விதமாக பேசுவதையே சீமான் வழக்கமாக வைத்துள்ளார் எனவும் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினால் தான் அவருக்கு நிதானம் வரும் என்றும் கூறி அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று தற்போது வடலூர் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக சீமான் பேசுவதாக கூறி ஏற்கனவே அவர் மீது 60 காவல் நிலையங்களில் வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது பதிவாகியுள்ள நிலையில் தற்போது அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 14ஆம் தேதி சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.