
உத்திரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் கோபால் மிஷ்ரா மற்றும் நயினா சர்மா தம்பதிக்கு, சிராக் (4) மற்றும் கிருஷ்ணா (1.5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நயினா, சிறு வயதிலிருந்தே ஆஷிஷ் மிஷ்ரா என்ற இளைஞருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். திருமணம் ஆன பிறகும், அந்த தொடர்பை மறக்க முடியாமல், அவரை மீண்டும் மீண்டும் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் மீண்டும் தொடர்பில் இருந்து, கள்ளக்காதலை வளர்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதில், நயினாவுக்கும் ஆஷிஷ் மிஷ்ராவுக்கும், கணவரும், குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக கருதி, கோபால் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த ஜூன் 30-ஆம் தேதி, கணவர் மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கலந்த பாலை கொடுத்து கொலை செய்ய முயன்றனர்.
அந்த திட்டம் நிறைவேறாததால் கத்தியால் குத்தி, மேலும் தலையணையால் நெஞ்சை அழுத்தி கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது கோபால் கூச்சலிட்டதும், அருகிலிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனையடுத்து நயினா மற்றும் ஆஷிஷ் இருவரும் தப்பிச் சென்றனர்.
பின்னர், பஹ்ஜோய் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு, நேற்று இருவரையும் கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.