ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. மிக அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதால் மக்கள் அனைவரும் விரும்பி பயணம் செய்கின்றனர்.

மேலும் இந்த ரயிலில் பயணச்சீட்டு பதிவு செய்யும்போதே உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கு மிகவும் சவுகரியமாக இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று ஒருவர் இந்த ரயிலில் செகந்திராபாத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு உணவாக சிக்கன் குழம்பு வழங்கப்பட்டது. அந்த நபர் சாப்பிடுவதற்காக பார்சலை பிரித்தபோது அதில் புழுக்கள் நெளிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணி உடனடியாக ரயில்வே அதிகாரியிடம் புகார் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்பு புகார் அளித்த அந்த பயணிக்கு மாற்றாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிக கட்டணம் வசூல் செய்யும் ரயில்களில் தரமான உணவு வழங்க நடவடிக்கை வேண்டும் என பயணிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.