
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சி.ஆர்.பி.எஃப் முன்னாள் வீரரான மணிகண்டன்(58) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அவர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பினாயில் விற்பனை செய்வதாக கூறிவிட்டு உயர் ரக வெளிநாட்டு மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் சோதனை நடத்தியதில் மணிகண்டனின் வீட்டில் உயர் ரக மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் விமான நிலையங்களில் இருந்து புரோக்கர்கள் மூலம் மதுபானங்களை வாங்கி மணிகண்டன் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 60 மது பாட்டில்கள், 36 டின்பியர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.