
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் கருக்கலைப்பு செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் விசாரணைக்கு ஆஜரானார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக சீமானிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் பெரியார் பற்றி பேசியதால்தான் தற்போது இந்த வழக்கில் என்னை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள். என் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும்போது இந்த வழக்கில் மட்டும் தீவிரம் காட்டுவது ஏன்.? இந்த வழக்கை முடிக்க 3 மாதங்கள் அவகாசம் இருக்கும் நிலையில் 3 நாட்களில் முடிக்க முயற்சிப்பது ஏன்.? கருணாநிதி என்னை கைது செய்து அரசியல் தலைவர் ஆக்கினார்.
தற்போது ஸ்டாலின் என்னை கைது செய்து முதல்வராக்க இருக்கிறார். நான் பெரியாருக்கு எதிராக பேசியதால் என்னை கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நான் கைது மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். இது அவர்களுக்கு நன்றாக தெரியும். என் மனைவி என்னை விட அதிக துணிச்சல் கொண்டவர். நாங்கள் இதைப் பற்றி வீட்டில் விவாதிக்க மாட்டோம். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் என்பதால் நான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய் தன்னுடைய பேச்சின் போது கொள்கை மற்றும் கருத்தியல் ரீதியாக அரசியல் தலைவர்களை விமர்சித்துள்ளார். அவர் பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்ட நிலையில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் எப்போதுமே விஜய் மீதுள்ள பாசம் குறையாது என்று கூறினார்.