உத்தரபிரதேசம் மாநிலம் ஜலால்பூரில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் ரமேஷ் குமார் தனது மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் ரமேஷின் தாயும் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தனது நகைகள் அனைத்தையும் பறித்ததோடு, 5 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மாமியார் மைத்துனர்களான ஸ்ரீநாத், ரக்ஷராம் ஆகியோரும் தன்னை துன்புறுத்துவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வரதட்சணை வாங்கி வர மறுத்த இளம்பெண்ணை அவரது கணவர் வீட்டை விட்டு வெளியேற்றினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.