மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் அர்ஷத் டோபி என்ற இளைஞர் மீது, ‘இப்பா’ எனப்படும் ரௌடி கும்பலின் தலைவர், தனது மனைவியை அர்ஷத் கொலை செய்ததாக குற்றம் சாட்டினார்.

நாக்பூரில் இயங்கி வரும் ‘இப்பா கும்பல்’ ரௌடி குழுவின் தலைவரின் மனைவியுடன் அர்ஷத் டோபி என்பவருக்கு திருமணத்துக்கு எதிரான நெருக்கமான உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இருவரும் பைக்கில் பயணித்த போது, ஒரு ஜேசிபி வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் அந்த பெண் படுகாயமடைந்தார்.

உடனடியாக அர்ஷத், காயமடைந்த அவரை அருகிலுள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள்  சிகிச்சை அளிக்க  மறுத்துவிட்டதாக தெரியவந்தது.

பின்னர், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போதும், பலனின்றி வெள்ளிக்கிழமை அந்தப் பெண் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, கும்பல் தலைவர் தனது மனைவியின் மரணத்திற்கு  அர்ஷத் தான் காரணம் எனக் கோபமடைந்து, இப்பா கும்பலை சேர்ந்த  40 பேர் கொண்ட குழுவை அர்ஷத்தைக் கண்டுபிடிக்க அனுப்பியுள்ளார். “விபத்தினால் உயிரிழந்தது இல்லை, திட்டமிட்டு அர்ஷத் கொலை செய்திருக்கிறான்” என்ற குற்றச்சாட்டும் அவர் எழுப்பியுள்ளார்.

தன்னுடைய உயிருக்கு அபாயம் இருப்பதாக உணர்ந்த அர்ஷத், நேரில் காவல் நிலையம் சென்று வாக்குமூலம் அளித்து, தன்னை பாதுகாக்கும்படி போலீசாரிடம் மனு அளித்துள்ளார். இதற்கிடையில், அர்ஷத் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்ததையும், அவருடன்  மருத்துவமனையில் இருந்ததையும் உறுதிப்படுத்தும் சிசிடிவி காட்சிகளும் தற்போது போலீசிடம் சான்றாக இருக்கின்றன. இது உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.