தேனி அருகே மதுராபுரியில் வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டம் நடைபெறக்கூடிய இடத்தில் நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் தெரிவிப்பார்.

வியூகங்களை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது. இன்னும் கூட்டமே நடைபெறவில்லை. அதற்கு முன்பே இதை விட பெரிதாக கூட்டம் கூட்டுவோம் என ஓ.பி ரவீந்திரநாத் கூறுகிறார் என்றால் அவர்களுக்கு இப்போதே  பயம் வந்துவிட்டது. கூட்டம் கூடட்டும் அல்லது தஞ்சாவூர் கடலில் கூட மூழ்கட்டும். அம்மா என்று கூறுவது ஜெயலலிதாவிற்கு 100% பொருத்தமானது. அப்பா என்பது ஸ்டாலினின் தந்தை கலைஞர் கருணாநிதிக்கு பொருத்தமானது. அதை ஏன் ஸ்டாலின் விரும்புகிறார் என்று தெரியவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.