
தமிழகம் முழுவதும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி எண்ம சான்றிதழ் வழங்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வருடந்தோறும் 9.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்காக தனியாக புத்தகம் அல்லது அட்டைகளை அச்சிடப்பட்டு அதில் கைகளால் எழுதி கொடுக்கும் முறையை இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் யூ-வின் செயலி மூலம் தடுப்பூசி எண்ம சான்றிதழை வழங்கும் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டமானது தமிழகத்தை பொறுத்தவரை திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அதனை தமிழக முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது அமல்படுத்தப்பட்ட பிறகு உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யூவின் செயல் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல அந்த செயலியில் பதிவு செய்யப்பட்ட கைபேசி நம்பருக்கு தடுப்பூசி தவணை குறித்த நினைவூட்டல் SMS அவ்வப்போது அனுப்பப்பட உள்ளது. இதன் மூலம் தவணை தவறவிட நிகழ்வுகள் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.