
பொதுவாகவே அனைவருக்கும் தங்கள் வாழ்வில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாக தான் இருக்கும். ஆனால் அதற்கான நிதி தேவை என்பது அதிகமாக இருப்பதால் பலருக்கு இது கனவாகவே சென்று விடுகிறது. ஆனால் மக்கள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதை தான் தமிழக அரசு கொள்கையாக கொண்டுள்ளது. அப்படி சொந்த வீடு கட்ட விரும்பும் மக்களுக்காக தமிழக அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது தமிழ்நாடு அரசு வீடு கட்ட நிதி தேவைப்படும் மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டம் தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலமாக வீடு கட்டுமானம், வீடு பழுதுபார்ப்பு மற்றும் வீட்டு வசதிகள் செய்வதற்கு தேவையான நிதி குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 12 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். இதில் இணைந்து பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளில் நேரடியாக சென்ற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.