
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் இருதய மணி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் மரிய விண்ணரசிக்கும் , ஆனந்த் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் ஆனந்த் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததோடு அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மரிய விண்ணரசி கோபித்துக் கொண்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு ஆனந்த் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு தொடர்ந்து அழைத்துள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில் நேற்று முன்தினம் பகல் தன் மனைவியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு ஆனந்த் அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவரின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதைத்தொடர்ந்து இரவில் மது குடித்துவிட்டு வந்து ஆனந்த் தன் மாமனாருடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் தோட்டத்தில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து தன் மாமனாரை சரமாரியாக அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருதய மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன் பிறகு ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இது குறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.