சென்னையில் உள்ள தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் செந்தில். இவர் கிண்டியில் உள்ள மடுவின்கரை பகுதியில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த முருகேசன் என்பவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து கை, கால்களில் பலத்த காயம் அடைந்தார்.

ஆனால் விபத்தை ஏற்படுத்திய காவலர் செந்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அவரது காரை விரட்டிச் சென்று கத்திப்பாரா மேம்பாலம் அருகே மடக்கி பிடித்தனர். அதன் பின் நடத்திய விசாரணையில் செந்தில் மது போதையில் இருந்ததாக தெரியவந்தது.

இதனை அடுத்து காவலர் செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனிடையே செந்தில் ஏற்படுத்திய விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதுகுறித்து அவரிடம் விசாரித்ததில் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்நிலையில் இன்று காலை தரமணி ரயில் நிலையம் அருகே பெட்ரோல் கேனுடன் சென்ற செந்தில் திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த அறிந்த தரமணி காவல்துறையினர் விரைந்து சென்று செந்திலின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.