
காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவகோரி மற்றும் வைஷ்ணவ் தேவி கோவில்கள் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் சிலர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் தாறுமாறாக ஓடிய பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பலியான நிலையில் 41 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பயங்கரவாத தாக்குதல் குறித்து எச்சரித்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த செய்தியும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வடகிழக்கு டெல்லியில் மண்டோலி என்ற பகுதி உள்ளது. இங்கு சவுரவ் குப்தா (21) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக சிவானி குப்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை. இதனால் குழந்தை வரம் வேண்டி வைஷ்ணவி தேவி கோவிலுக்கு தன் மனைவியுடன் அவரும் பேருந்தில் சென்றார். அப்போது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இது குறித்து எச்சரிப்பதற்காக உடனடியாக சவுரவ் பேருந்தில் இருந்து துணிச்சலாக எழுந்து மற்றவர்களுக்கு எச்சரித்தார்.
அப்போது அவருடைய கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவியின் கண் முன்னே சவுரவ் துடித்து பலியான நிலையில் அந்த அதிர்ச்சியில் இருந்து ஷிவானி இன்னும் மீளாமல் இருக்கிறார். இந்த தாக்குதலில் சிவானியின் முகம் மற்றும் உடம்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுக்கு முன்பாக தன் பாட்டியிடம் சிவானி வீடியோ காலில் பேசிய நிலையில் இயற்கை அழகை அவரிடம் காண்பித்துள்ளார். அந்த சமயத்தில் தான் பயங்கரவாதிகள் தாக்குதலில் அவர் கண்முன்னே கணவர் பலியானார். இந்த தகவலை சௌரவின் மாமா மனோஜ் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.