கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணையிலிருந்து காவிரி ஆற்றில் அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கே ஆர் எஸ் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு முப்பதாயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கபினி மற்றும் ஹேமாவதி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் தஞ்சை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டுள்ளது.