உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. கஞ்ச்ரா படித்துறையில் உள்ள கவுன்சிலி கிராமத்தைச் சேர்ந்த கரண் என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை தாக்கி கால் பிடித்து தண்ணீருக்குள் இழுக்க ஆரம்பித்தது.

இந்த பயங்கர சூழ்நிலையிலும் தைரியத்தை இழக்காமல், கரண் அந்த முதலைக்கு எதிராக கடும் போராட்டம் செய்துள்ளார். முதலில் பயத்தில் இருந்த கரண், முதலையின் முகத்தில் பலமுறை அடித்து உதைத்தார். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தாக்கிய பிறகு, முதலையின் பிடியில் இருந்து தப்பித்து தண்ணீரிலிருந்து வெளியே வந்தார்.

இந்த தாக்குதலில் கரணின் கைகள், கால்கள் மற்றும் வாயில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அவரது காலில் முதலையின் கூர்மையான பற்கள் தாக்கியதில் இரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு பகுதியில் சதை கிழிந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கரணுக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்தாக பேசிய கரண், “முதலை என் காலை கடித்தவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் பயந்து நின்றேன். பிறகு திடீரென அதனை அடிக்க ஆரம்பித்தேன். அதனால் தான் தப்பிக்க முடிந்தது” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கரணின் துணிச்சலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.