
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏற்கனவே தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். விரைவில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் திமுகவுடன் இணைந்து வெகுண்டெழுகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வருகின்றார். எனவே புதிய கல்விக் கொள்கையை எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இரும்பு மனிதனைப் போல் ஏற்கனவே உறுதியாக இருப்பவர் இந்த விவகாரத்திலும் உறுதியாக இருப்பார்.
பாஜகவின் தலைவராக இருந்த போது எல். முருகன் வேல் யாத்திரை நடத்தி ஏதாவது ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார். அவர் வேல் யாத்திரைக்கு பிறகு தான் இந்த தமிழக மண்ணில் திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி காட்டினார். அதன் பிறகு அண்ணாமலை ஆன்மிகத்தை கையில் எடுத்து ஏதாவது ஒரு வகையில் தமிழகத்தை கைப்பற்றி விடலாம் என்று காவடி கூட எடுத்துப் பார்த்தார். காலிலே செருப்பு அணியாமல் கூட நடந்து பார்த்தார்.
ஆனால் தமிழக மக்கள் 39 அல்ல 40-ம் திமுகவுக்கு தான் என நாடாளுமன்ற தேர்தலில் பதிலளித்துள்ளனர். இந்த ஆட்சியைப் போல் எந்த ஆட்சியிலும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது இல்லை. அதனை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகின்றார். மதத்தால், இனத்தால் மற்றும் மொழியால் தமிழக மக்களை பிளவுபடுத்த பார்க்க முடியாது. சங்கிகள் தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஊதி பெரிய பிரச்சனையை உருவாக்குகிறார்கள் என சேகர் பாபு பேசியுள்ளார்.