உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தின் சர்காரி கோட்வாலி பகுதியில் உள்ள சிந்தேபுரா மொஹல்லாவில், ஒரு புதுமணத் தம்பதிகள், குளிர்பானம் குடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் இருவரும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதாவது தீரேந்திர அஹிர்வார் (18) என்ற இளைஞர், 2 மாதங்களுக்கு முன்பு, சாண்டோவிலில் வசிக்கும் சோனியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இருவரும் திருமணத்திற்கு பிறகு தீரேந்திரா வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவ நாளில் தீரேந்திரா ஒரு குளிர்பான பாட்டிலை கொண்டு வீட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, கணவன் மனைவிக்கிடையே ஏதோ ஒரு விவகாரம் குறித்து தகராறு ஏற்பட்டதாக அவரது தந்தை கூறியுள்ளார். கோபத்தில் சோனியா பாட்டிலை தூக்கி வீசியதால்  மனமுடைந்த தீரேந்திரா மேல் மாடிக்கு சென்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

கணவர் கயிற்றில் தொங்கவதை பார்த்து அதிர்ச்சியடைந்த சோனியா, உடனடியாக கீழே சென்று குடும்பத்தினரை அழைத்தார். அவர்கள் மேலே சென்று தீரேந்திராவை பார்க்கும் நேரத்தில், சோனியா வீட்டின் கீழ் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால், குடும்பத்தில் துயரம்  நிலவுகிறது.

இந்த சம்பவம் குறித்து மஹோபா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வந்தனா சிங் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.