புதுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி (32) மற்றும் மகாலட்சுமி ஆகியோர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியர், திருவோணம் பகுதியில் 12 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

அவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் வீடு காலி செய்ய வேண்டிய சூழ்நிலையில், கலியமூர்த்தியின் தாயார் இருவரையும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சொந்த ஊருக்கு வந்ததற்குப் பிறகு, மகாலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பிள்ளைகளை பார்த்துக்கொள்ள அனுமதி அளித்ததுடன், தம்பதியர்கள் அமைதியாக வாழலாம் என சம்மதம் தெரிவித்தனர். ஆனால் நேற்று மகாலட்சுமி தனது பிள்ளைகளுடன் வெளியூருக்கு சென்றிருந்தபோது, கலியமூர்த்தி வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது மகாலட்சுமியின் அண்ணன், தம்பி, சித்தப்பா, தாய் மாமன் ஆகியோர் வீடு புகுந்து கலியமூர்த்தியிடம் உன்னை வெட்டி போட்டால் யார் கேட்பா என கூறி கொடூரமாக வெட்டியதாக கூறப்படுகிறது. தாக்கிய பின்னர் அவரை ஆற்றுக் கால்வாயில் தூக்கி வீசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த கலியமூர்த்தி தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் உறையுணர்வுடன் பேசிய மகாலட்சுமி, “என் கணவரை திட்டமிட்டு தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.