
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அபிஷேக் பசாலி என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்கள். இவர் காதலித்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அபிஷேக் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு மனைவி மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து அவருக்கு மனரீதியாக தொல்லைகள் கொடுத்ததோடு தன்னை கணவர் டார்ச்சர் செய்வதாக கூறி காவல் நிலையத்திலும் அவர் மனைவி புகார் கொடுத்துள்ளார்.
இதனால் அபிஷேக் மன வேதனையில் இருந்த நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய மனைவி மற்றும் மகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வந்த அபிஷேக் பின்னர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் தன்னுடைய மனைவி மற்றும் மாமியார் மனரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுப்பதால் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அபிஷேக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.