
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டை பகுதியில் மின் துறை ஊழியரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற 26 வயது மகன் இருந்த நிலையில் இவர் கோவில் பூசாரியாக இருந்தார். அதோடு சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும் பணிகளும் செய்து வந்தார்.
இவருடைய தங்கை அபிதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய தங்கை வேறு சமுதாயத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டதால் முத்துக்குமார் மிகுந்த மன வேதனையில் இருந்தார்.
இந்நிலையில் முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நேற்று முன்தினம் திடீரென கதவை பூட்டி கொண்டார். அதன் பின் நீண்ட நேரமாக அவர் வெளியே வராமல் இருந்த நிலையில் குடும்பத்தினர் சந்தேகப்பட்டு கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்காததால் பின்னர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தனர்.
அப்போது முத்துக்குமார் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இதைப்பார்த்து குடும்பத்தினர் கதறி துடித்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி மானூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முத்துக்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.