
சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தின் ருத்ரி பகுதியில், ஒரு காதலன், தனது காதலியின் கணவரை கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசா மாநிலம் ரூர்கேலாவைச் சேர்ந்த சோனு சாஹு என்பவர், இரண்டு ஆண்டுகளாக தனது பழைய காதலியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். “நான் உன்னை நேசிக்கிறேன், உன் கணவனை விட்டு வா” எனத் தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், மே 8ஆம் தேதி பெண்ணின் இரவு குடும்பம் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் நுழைந்த அவர், பெண்ணிடம் தகராறு செய்தார். இதை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை கத்தியால் அவர் குத்திவிட்டார்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட கணவருக்கு கழுத்து, விலா எலும்பு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்ட அவர், உடனடியாக வீட்டினரை எழுப்பி, போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஒரிசாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற சோனுவை, தொழில்நுட்ப கண்காணிப்பு மூலமாக கண்டுபிடித்து, மகாசமுந்து மாவட்டம் சிகோரா பகுதியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சோனு, விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தின் போது பயன்படுத்திய கத்தியும் போலீசாரால் மீட்கப்பட்டு, அவரது மீது கொலை முயற்சி மற்றும் புகாரளித்தவரை துன்புறுத்தல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கி வருகிறது.