
உத்தர பிரதேஷ் மாநிலம் பினாலி கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ் குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமன் குமாரி என்ற பெண்ணும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சுமன் குமாரியின் குடும்பத்தினர் அவரை ஹரியானாவை சேர்ந்த கிருஷ்ண யாதவ் என்பவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் டிசம்பர் மாதம் தனது வீட்டிற்கு வந்த சுமன் குமாரி வீட்டில் இருந்து வெளியேறி நீரஜ் குமார் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி சுமன் குமாரியை மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்தனர். நீரஜ் குமாரும் சுமன் குமாரியை அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு அவரது வீட்டில் இருந்து குமாரியின் அழுகுரல் கேட்பதாக நீரஜ் குமாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். புகாரை ஏற்ற போலீசார் சுமன் குமாரியின் வீட்டிற்கு வந்த போது அங்கு அவரை காணாமல் தேடி உள்ளனர்.
அப்போதுதான் சுமன் குமாரி அவரது கணவர் மற்றும் சகோதரர் என நான்கு பேரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சடலத்தை மீட்டு நான்கு பேரை கைது செய்துள்ளனர்.