தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோட்டில் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சமீபத்தில் நடந்த அதிமுக பொது குழு கூட்டத்தின் போது திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியதாவது, முந்தைய அரசு போன்று வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு விட்டு செல்லும் அரசு இது கிடையாது. திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவுகள் பெருகுவதால் அதிமுகவுக்கு வயித்தெரிச்சல். தொடர்ந்து ஆதரவு பெருகுவதால் எடப்பாடி பழனிச்சாமி உளறிக் கொண்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் இபிஎஸ் பொய் கூறுவது அழகல்ல. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டதோடு சாத்தனூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவது. சட்டமன்றத்தில் செந்தில் கவுண்டமணி வாழைப்பழ காமெடி போல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். காலி குடம் உருண்டால்தான் சத்தம் அதிகமாக வரும். மேலும் எங்களை பார்த்து கத்தி பேசும் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை பார்த்து கீச்சு குரலிலாவது கத்தக்கூடாதா என்று கூறினார்.