மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஷாகபூரில் உள்ள ஆர்எஸ்.தமாணி பள்ளியில் நடந்த செயலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.  அதாவது 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பல மாணவிகள் தங்கள் உடைகளை ஆசிரியர்களிடம் கட்டாயமாக அகற்ற அழுத்தப்பட்டதாக கொடூரமான புகார்கள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாக கூறப்படுகிறது. பள்ளியின் கழிப்பறையில் இரத்தக்கறைகள் காணப்பட்டதையடுத்து, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவிகளையும் ஒரு அறையில் அழைத்து விசாரணை நடத்தினர். மாதவிடாய் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டதோடு, சில மாணவிகள் அணிந்திருந்த உள்ளாடையை அகற்றுமாறு கூறப்பட்டதாக பெற்றோர் கடும் குற்றச்சாட்டு செய்துள்ளனர்.

ஒரு பெற்றோர் “இது மாதவிடாய் என்பது போன்ற இயற்கையான விஷயங்களைப் பற்றிய கல்வி தர வேண்டிய இடத்தில், மாணவிகள் மனஅழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இது மிகவும் அவமானகரமானதும், அருவருப்பானதுமான செயல். பள்ளி முதல்வர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செயலால் மாணவிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி, வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கண்ணீருடன் விளக்கினர். சம்பவம் தெரிந்ததும், அடுத்த நாள் பள்ளிக்கு வந்த பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது, போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி முதல்வரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் மகாராஷ்டிரா முழுக்க கோரிக்கையும் கோபத்தையும் கிளப்பி உள்ளது.