
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பெற்ற தாயே 3 வயது மகனை கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனிஷா யாதவ் என்ற அந்த பெண், தன் மகன் அனிருத்தை கழுத்தில் கட்டியிருந்த கயிறை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனிஷா, தனது காதலருடன் தவறான உறவில் இருந்த நிலையில் அவருடன் ஓடிவிட்டார். பின்னர் தன் மாமியாரின் அழுத்தத்தினால் கட்டாயமாக வீட்டிற்கு திருப்பி அழைத்து வரப்பட்டதும், மன உளைச்சலில் இருந்த அவர் இந்த கொடூர நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது மகனைக் கொன்ற பிறகு, அவனது உடலை மாமனார் தூங்கிக்கொண்டிருந்த வீட்டின் மேல் மாடியில் கொண்டு சென்று, பெருங்கம்பளியால் மூடி வைத்துவிட்டு, மனிஷா மீண்டும் சமையலறைக்கு சென்று இரவு உணவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். சிறுவனின் உடல் மூடிய நிலையில் இருந்ததை மாமனார் கவனித்ததும், உடனடியாக சத்தம் போட்டார். பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனிஷாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மனிஷா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.