பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்டத்தில், சமுதாயத்துக்கு நல்ல முன்மாதிரியாக அமைந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணமான பிறகும் தனது மருமகளுக்கு கல்வி தொடர வேண்டும் என்பதற்காக, ஒரு மாமியார் நேரில் பள்ளிக்குச் சென்று திருமணமான  ஒரு வாரத்திற்குப் பிறகு, தனது புதிய மருமகளை ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

சத்தப்பூர் தொகுதியின் கதாரா பஞ்சாயத்தில் வசிக்கும் அந்த மாமியார், தனது புதிய மருமகளை பள்ளியில் சேர்ப்பதற்காக  பள்ளி ஆசிரியரை சந்தித்தார். “என் மருமகள் படிக்க வேண்டும். அவள் வாழ்க்கையை சுயமாக வாழ கற்றுத் தரவேண்டும்,” என அவர் கூறியதாகவும், இது அனைத்து பெற்றோர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் சமூதாயத்தில் பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த அற்புதமான சம்பவத்தை பள்ளி ஆசிரியை ஸ்மிதா தாக்கூர் என்பவர் மொபைலில் படம் பிடித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரும் இந்த மாமியாரின் எண்ணத்தைக் கண்டு பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். “திருமணத்திற்கு முன்பே என் மருமகள் இங்கேயே படிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அவள் தன்னிறைவு பெற வேண்டுமென்றே விருப்பம்,” என மாமியார் கூறியுள்ளார்.

இந்த சம்பவம், மாமியார் மற்றும் மருமகளின் உறவில் புதுமுகம் காட்டும் விதமாக, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு  மாநில கல்வித் துறையும் நேரடியாக பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

கல்வி குறித்து உள்ள விழிப்புணர்வையும், பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள் அனைவருக்கும் பாசிட்டிவ் பந்தயமாக அமைந்திருக்கின்றன.