
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் பாவிக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் பாவிக் பாயல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பாவிக் தனது மனைவியை பெற்றோர் வீட்டில் இருந்து அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது காரில் வந்த சிலர் மோட்டார் சைக்கிள் மீது மோதி பாவிக்கை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். பாவிக்கிற்கு திருமணம் ஆகி 4 நாட்கள் தான் ஆகியிருந்தது. இதனால் அவரது மனைவி பாயலிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது பாயல் தனது உறவினரான கல்பேஷ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் பாயலின் குடும்பத்தினர் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக பாவிக்கிற்கு அவரை திருமணம் செய்து வைத்தனர்.
இதனால் பாயல் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கடத்தி கொலை செய்துள்ளார். பாவிக் வீட்டில் இருந்து கிளம்பிய உடன் பாயல் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டார். அதன் பிறகு தனது கணவர் இருக்கும் இடத்தை காதலனிடம் கூறியுள்ளார். உடனே கல்பேஷ் தனது கூட்டாளிகளுடன் வந்து பாவிக்கை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை நர்மதா ஆற்று கால்வாயில் தூக்கி போட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.