சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம் அமைய இருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் அடைவதற்காக கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் அமையும் பேனா நினைவு சின்னம் வரை உயர்மட்ட பாலம் கட்டப்பட இருக்கிறது. இந்த பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக்கணிப்பு கூட்டம் கடந்த 31-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்.‌

இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் சேர்ந்த திமுக கட்சியின் தீவிர தொண்டரான பிரபாகரன் என்பவர் தன்னுடைய வீட்டில் சுமார் 3 லட்சம் மதிப்பில் 16 அடி உயரத்தில் சில்வர் மற்றும் பைபர் போன்றவற்றால் செய்யப்பட்ட பேனா உருவம் தயார் செய்து வைத்துள்ளார். இந்த பேனா நினைவுச் சின்னத்தை அவருடைய வீட்டின் முகப்பு பகுதியில் கடந்த 16-ஆம் தேதி பொருத்தினார். இந்த நினைவுச் சின்னத்தை பலரும் ஆர்வத்தோடு வந்து பார்த்து செல்வதோடு செல்போனில் புகைப்படம் எடுத்துச் செல்கிறார்கள். மேலும் கலைஞரின் பேனா நினைவு சின்னத்தை அமைப்பதற்கு கடும் கண்டனங்கள் வந்த நிலையில் தற்போது திமுக கட்சியின் தொண்டர்  ஒருவர் தன்னுடைய வீட்டிலேயே கலைஞர் கருணாநிதியை போற்றும்  வகையில் பேனா நினைவு சின்னத்தை வைத்திருப்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.