கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள ஜம்கண்டி பகுதியில், மகிழ்ச்சியாக நடந்த ஒரு வளைகாப்பு விழா, திடீரென மரண துக்க நிகழ்வாக மாறிய அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இந்த விழாவில் 33 வயதான சதீஷ், தன்னுடைய மனைவியின் வளைகாப்பு விழாவின் போது திடீரென மாரடைப்பால் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சதீஷின் மனைவி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தம்பதியர், இனிய வாழ்விற்கான பெரும் எதிர்பார்ப்புடன் விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர். விருந்தினர்களுக்கு சதீஷ் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்து வந்தார். ஆனால், விழா நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட மாரடைப்பு, எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்தது. சிறிது நேரத்திலேயே நிகழ்ந்த மாற்றம், விழா மண்டபத்தில் துயர காட்சியைக் கிளப்பியது.

இந்த சோகமான சம்பவத்தில், தந்தையாகும் மகிழ்ச்சி கூட அனுபவிக்க முடியாமல், தனது குழந்தையை பார்வையிடும் வாய்ப்பு இல்லாமல், சதீஷ் உயிரிழந்தது அனைவரையும் இரங்கச் செய்துள்ளது. தங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்கும் சந்தோஷம் மிகுந்த துக்கத்தில் முடிந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.