திருமணத்திற்கு முன்பே எச்ஐவி தொற்று இருப்பதை மறைத்து திருமணம் செய்து, மனைவிக்கும் தொற்று ஏற்பட காரணமாக இருந்த கணவர் உள்பட உறவினர்களைச் சேர்த்து மொத்தம் 5 பேர் மீது மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கையின் சில மாதங்களில் அந்தப் பெண் கர்ப்பமாகியிருந்தார்.

கர்ப்ப பரிசோதனையின் போது, அவர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்ததுடன், கணவருக்கும் அதே வகை தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்திற்கு முன்னரே கணவருக்கு தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.

தற்போது அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், முன்கூட்டியே மருந்துகள் எடுத்துக் கொண்டதனால், குழந்தை எச்ஐவி தொற்றின்றி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 10ம் தேதி, மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், “எச்ஐவி இருப்பதை மறைத்து திருமணம் செய்து கணவர் மோசடி செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார்  விசாரணை நடத்தியதில்கணவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் இணைந்து உண்மையை மறைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெண்ணின் கணவர் உள்பட  5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, குற்றச்சாட்டுக்கு உள்ளான இவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை பிடிக்க விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.