மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தரக்குறைவாக விமர்சித்த காமெடியன் குணால் கம்ரா விவகாரம் அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். “கருத்து சுதந்திரத்தை சிலர் தங்களது பிறப்புரிமையாகக் கருதி நாட்டை பிளவுபடுத்தும் பேச்சுகளை தாராளமாக பேசுகிறார்கள். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அதேசமயம், ஒருவர் கருத்து சுதந்திரத்தின் பெயரில் தாக்கப்படும் நிலை ஏற்படக்கூடாது” என அவர் கூறினார். கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு உத்தரபிரதேசம் மாநிலத்தில் அடிக்கடி கலவரங்கள் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாபியா கும்பல் இருந்தது. அதனை ஒழித்துக் கட்டினோம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரியை கட்டி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினோம் என யோகி ஆதித்யநாத் கூறினார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்டாண்ட் அப் காமெடியான குணால் கம்ரா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அவர் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ ஓட்டியவர் என பேசியதோடு, துரோகி என விமர்சித்தார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தது. இதனால் கோபமடைந்த சிவசேனா கட்சியினர் அந்த ஸ்டுடியோவை அடித்து நொறுக்கினர். நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டூடியோவின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டது எனக் கூறி இடித்தனர். அதில் எஞ்சிய பகுதிகள் நேற்று இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.