தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை விஜய் தொடங்கிய நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு முடிவடைந்த பிறகு நடிகர் விஜயின் கட்சி கொள்கைகளில் உடன்பாடு இல்லாத காரணத்தால் சீமான் சரமாரியாக விமர்சிக்க தொடங்கி விட்டார்.

இருப்பினும் விஜய் சீமானை விமர்சிக்கவில்லை. அதே சமயத்தில் சீமானுக்கு சமீபத்தில் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில் சீமானும் தம்பி என்று கூறி விஜய்க்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் விலகி  தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததால் தற்போது சீமானுக்கு விஜய் மீது கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதைப் பற்றி கேட்டபோது என் கட்சியிலிருந்து விலகி பிற கட்சிகளில் சேருபவர்களிடம் முதலில் நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை காட்ட சொல்லுங்கள்.விஜய் என்ன பெரிய தலைவரா. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருந்த காலத்தில் நான் கட்சி தொடங்கினேன்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை விட விஜய் என பெரிய தலைவரா.? அவர்கள் கூட்டாத கூட்டத்தையா விஜய் கூட்டி விட்டார். என்னை விரும்புகிற மக்கள் பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடியவர்கள் கிடையாது. களத்தில் நிற்கும் தலைவனை பார்த்து தேர்வு செய்தவர்கள். காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதர்கள் ‌ எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார். மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை விட விஜய் என பெரிய தலைவரா என்று சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.