ஹிமாசல பிரதேசம், உனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) கிளையில் பணியாற்றும் மேலாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றும் இரு பெண் ஊழியர்களிடம்  ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மாணீந்திரா கன்வார் என்ற சிஎஸ்‌எம் (சர்வீஸ் மேலாளர்). இவர்மீது இரு பெண்கள் தொடர்ச்சியாகத் தொந்தரவு அளித்ததாகவும், பாலியல் உறவுக்காக அழுத்தம் கொடுத்து, அதற்குப் பதிலாக iPhone வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நியாயமற்ற நிகழ்வுகளில் ஒருவிதமான ஆதாரம் தேவைப்பட்ட நிலையில், பெண் ஊழியரொருவர் கடந்த ஜூலை 2ஆம் தேதி அவர் மற்றொரு பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொள்ளும் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ மற்றும் எழுத்துப்பூர்வமான புகாரின் அடிப்படையில் போலீசார் மாணீந்திரா கன்வாருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது உனா மாவட்ட SBI கிளைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவான இரண்டாவது பாலியல் புகார் வழக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பெண் ஊழியர்கள் இடத்தில் தொடரும் இந்தவகை ஒழுங்கீனங்கள் தொடர்பாக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.