
கனமழை வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்கள் நகல்களை கட்டணம் இன்றி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டம் மாணவ மாணவிகள் கட்டணமின்றி கல்வி சான்று நகல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தற்போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப் பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ‘மிக்ஜாம் புயல்” காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை இழந்த மாணவ/ மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு எதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ/ மாணவியர்களும் தங்கள்இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற அச்சான்றிதழ்கள் பற்றிய விவரங்களை மேற்கண்ட இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
மாணவ/ மாணவிகள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்த பின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (acknowledgement) அனுப்பப்படும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடமிருந்து பெறப்பட்டு, மாணவ/ மாணவியர்களுக்கு அவர்கள், எந்த மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தார்களோ, அதே மாவட்டத்திலேயே, அவர்களுக்கு வழங்கப்படும். அதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்திலேயே வழங்கப்படும். மேலும் இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800- 425- 0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை – “கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்குதல்”#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @RRajakannappan pic.twitter.com/z5x5iJDQ6y
— TN DIPR (@TNDIPRNEWS) December 23, 2023