
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உதகை மண்டலத்தில் தொடர் கன மழை பெய்து வருவதால் நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 19 இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை மண்டலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.