
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பண விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையின் போது, வாலிபர் தனது தம்பியின் மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயியான பெரியசாமியின் மகன்கள் பிரபாகரன் (31) மற்றும் சரவணகுமார் (29). இருவரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆறுச்சாமியின் மகள்களான மாசிலாமணி மற்றும் கீர்த்தனா ஆகியோரை திருமணம் செய்து கொண்டிருந்தனர். பிரபாகரன் தனது மனைவியுடன் புஞ்சைகாளிக்குறிசியில் வசித்து வர, கீர்த்தனா தனது கணவர், குழந்தையுடன் மாமனார் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் பிரபாகரன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் தான் கொடுத்த ரூ.10,000 பணத்தை ஆறுச்சாமியிடம் கேட்பதற்காக தோட்டத்து வீட்டிற்கு சென்றார். அப்போது, கீர்த்தனா அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி, கோபமடைந்த பிரபாகரன் கீர்த்தனாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டார்.
தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்குப் பின்னால் பண விவகாரம் தவிர வேறு காரணங்களும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.