
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த சிவனகவுடா பட்டீல் (வயது 43), தனது மனைவி ஷைலாவுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத் தகராறுகள் நடைபெற்று வந்தன. காரணம், ஷைலாவுக்கும் பலோகி பகுதியைச் சேர்ந்த ருத்ரப்பாவுக்கும் ஏற்பட்டிருந்த கள்ளக்காதல். இதனால் சவனகவுடா பலமுறை மனைவியையும், ருத்ரப்பாவையும் கண்டித்தும், இருவரும் உறவைக் கைவிட மறுத்ததால் குடும்பத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை உருவாகியது.
இதையடுத்து ஏப்ரல் 2-ஆம் தேதி, தனது மனைவியை தாயின் ஊரான காடிகொப்பா கிராமத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே விட்டு விட்டு, சிவனகவுடா பட்டீல் தனியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் மர்ம நபர் ஒருவர் அவரைதாக்கியுள்ளார். பின்னர் பெரிய கல்லை தலையில் அடித்து கொலை செய்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் இறந்தவர் மீது தலையில் கல்லால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். பின்னர், மனைவி ஷைலாவும் சம்பவ இடத்திற்கு வந்து கணவனின் மரணத்தை பார்த்து கதறி அழுவது போல நடித்து அனைவரையும் ஏமாற்ற முயன்றார்.
ஆனால் போலீசாருக்கு ஷைலாவின் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரது செல்போன் பதிவு மற்றும் அழைப்புகளை சோதனையிட்டனர். அதில், கொலை நடந்த நேரத்திலும் அதற்குப் பிறகும் ஷைலா, ருத்ரப்பாவுடன் பேசியிருப்பது தெரியவந்தது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவருக்கும் தொடர்ச்சியாக தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில், ஷைலா தான் கணவரை கொலை செய்ய ருத்ரப்பாவுடன் சேர்ந்து திட்டமிட்டது, மேலும் கொலை செய்யும் நேரத்தில் வீடியோ காலில் பார்த்து ரசித்ததையும் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து ருத்ரப்பா மற்றும் ஷைலா இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது இருவருக்கும் எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.