
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் கால்வாயில், கணவரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்ற போலீஸ் கான்ஸ்டபிள் அங்கித் தோமர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அவர் விரைவாக அந்தப் பெண்ணை நோக்கி நீந்திய போது மூச்சுத்திணறல் காரணமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்த போக்குவரத்து துணை ஆய்வாளர் தர்மேந்திரா மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பெண் பத்திரமாக மீட்கப்பட்டாலும், தோமர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து டிரான்ஸ் ஹிண்டன் துணை காவல் ஆணையர் நிமிஷ் பாட்டீல் கூறுகையில், “விரைந்து செயல்பட்டு ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய தோமர், தனது கடமையை மீறாத வகையில் வீரமாக செயல்பட்டார்,” என்று பாராட்டு தெரிவித்தார். தோமரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு தரப்பில், தோமரின் வீரச் செயலை மதித்து, அவரது குடும்பத்துக்காக நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் தோமரின் தன்னலமற்ற செயல் பாராட்டுப் பெருவெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.